பங்குச்சந்தை ஊழல் விவகாரம் : ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

By 
koyal

மிகப் பெரிய பங்குச் சந்தை ஊழல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாமல் ராகுல் இவ்வாறு பேசுவதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “போலி கருத்துக் கணிப்புகளுக்கும், தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பாஜகவுக்கும் என்ன தொடர்பு என்பதை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பியூஷ் கோயல், ”மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததை ராகுல் காந்தியால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று தோன்றுகிறது. எனவே இப்போது அவர் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை ஏமாற்ற முயல்கிறார்.

இன்று, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதை முழு உலகமும் ஏற்றுக்கொள்கிறது. இந்த முறை இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ரூ.67 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் சந்தை மதிப்பு, தற்போது ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மிகவும் பயனடைந்துள்ளனர்” என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்

Share this story