காவிரி நதிநீர் வழக்கு குறித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பின்னர் 16-ந்தேதி கல்லணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆரம்பத்தில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாட்கள் செல்ல செல்ல குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் பாசனத்துக்காக தண்ணீர் முற்றிலும் குறைய தொடங்கியது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காயத் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
செப்டம்பர் மாதம் திறந்து விட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு எஞ்சியி ருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல் படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது . அப்போது காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு அமைக்கப்படும் என்றும், அந்த அமர்வில் கர்நாடக அரசு தன் தரப்பு வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
அதன் படி இன்று புதிய அமர்வு அமைக்கப்படுகிறது. அதில் கர்நாடக அரசு தங்கள் வாதங்களை முன் வைப்பர். இந்த புதிய அமர்வு மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்குமா? என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் குறுவை பாசனத்திற்கான தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.