தேசவிரோதிகளின் புகலிடமாக தமிழ்நாடு : அண்ணாமலை பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டிப்பது, தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 வழங்கு வதாக வாக்குறுதி தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கண்ணீரில் வாழும் ஏழைக் குடும்பங்களை காக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டிப்பது. மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாகன பதிவுக் கட்டணங்கள் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான கட்டண உயர்வை விதித்து இருப்பதை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் பஞ்சாயத்துகள் வரை ஆயிரக்கணக்கான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதியில் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகளிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 198-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் லியோ சுந்தரம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
3-வது முறையாக வேண்டும் மீண்டும் மோடி என்ற குரல் நாடு முழுவதும் கேட்க தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது பா.ஜனதா என்று கேட்பார்கள். இன்று வார்டு அளவிலும் பஞ்சாயத்து அளவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். ஆனால் 67 சதவீதம் பேருக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.
இப்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதிலும், எவ்வளவு பேரை குறைக்கலாம் என்று திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். பதவி ஏற்றது முதல் கணக்கிட்டு பதவி ஏற்றது முதல் கணக்கிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.27 ஆயிரம் வழங்க வேண்டும். போலி திராவிட மாடல் ஆட்சியை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவார் என்பது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 27 மாதங்களிலும் எதுவும் செய்ய வில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பிதான் அரசு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது. மணிப்பூர் பிரச்சினையை மத்திய அரசும், அந்த மாநில அரசும் இணைந்து தீர்த்து வைக்கும்' என்றார்.