இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை..!?

By 
erasai12

'தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நினைத்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பை நிச்சயம் உருவாக்க முடியும்' என அரசியல் ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான தேனி திருமலை தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல் கட்டமாக, இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி நடத்தும் 8 மாநில முலமைச்சர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை கடிதம் மூலம் அனுப்பினார்.

அதில், 'நீட் தேர்வை ரத்து  செய்யக்கோரி அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தற்போது 3- வது முறையாக நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், இன்னும் வேகம் காட்டும் வகையில் இந்தியா கூட்டணி சார்பில், பாராளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து வலுவான கோரிக்கைகள் வைப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர் முயற்சிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் சந்தித்து இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆலோசனையை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு  மத்திய அரசே பொறுப்பு என்று தெரிந்தும், தமிழக சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அவர்கள் 'நீட் தேர்வு அவசியம் தேவை' என்று பேசியிருப்பது, 'முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச்' சமமாகும்;  அவர்களது பேச்சு தமிழக மக்களுக்கு எதிரானது; கடும் கண்டனத்துக்குரியது.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், நீட் தேர்வு பிரச்சனையில் மத்திய அரசுக்கு ஆதரவாக, திமுக ஆட்சிக்கு எதிராகப் பேசி வருவது 'உண்ட வீட்டுக்கு இரண்டகம்' செய்வதற்கு ஒப்பாகும். இனியாவது எதிர்க்கட்சிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்திலும் புதுவையிலும் 40/40 என்ற மாபெரும் வெற்றி பெறுவதற்கு காரணமான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நினைத்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பை நிச்சயம் உருவாக்க முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்' என அரசியல் ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான தேனி திருமலை குறிப்பிட்டுள்ளார்.

Share this story