’நன்றி! மீண்டும் வராதீர்கள்’ : அதிமுகவில் டிரண்ட்டாகும் பதிவு..

By 
e43

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவியது. பேரறிஞர் அண்ணாவை பற்றி விமர்சித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் அண்ணாமலைக்கும் வார்த்தை மோதல் வெடித்தது.

அண்ணாவை பற்றிய தமது கருத்துக்கு வருத்தமோ மன்னிப்போ கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்தார். இதையடுத்து அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணியில் நீடிக்க முடியும் என்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குழு வலியுறுத்தியது.  

ஆனால், அதிமுகவின் கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்த நிலையில்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாஜக கூட்டணியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.

சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் துணை பொது செயலலாளர் கே.பி.முனுசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, திட்டமிட்டு அதிமுக தலைவர்களை அவதூறாக பேசியதால் இந்த முடிவை எடுத்ததாக கே.பி.முனுசாமி விளக்கம் அளித்தார்.

மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து  தேர்தலை சந்திப்போம் என்றும் அப்போது அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதனிடையே, ’நன்றி! மீண்டும் வராதீர்கள்’ என அதிமுகவின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் ட்ரெண்டாகி வருகின்றனர். 

முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த பொதுச்செயலளார் எடப்பாடி பழனிச்சாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Share this story