ஜெயலலிதா பயன்படுத்திய கார் விற்பனைக்கு; வெறும் 2.72 லட்சம் தான்..

By 
jcar

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி (Tata Safari) கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு வெறும் ரூ.2.72 லட்சம் தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரை வாங்க பலரும் ஆர்வமாக இருக்கும் நிலையில், விலை இவ்வளவு குறைவாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார்களை மிகவும் விரும்பக்கூடியவர். 1999ஆம் ஆண்டு ஜெயலலிதா ஒரு டாடா சஃபாரி காரை வாங்கினார். 2007ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா இந்தக் காரில் தான் பயணித்து வந்தார்.

2007ஆம் ஆண்டில் தன் நண்பர் பாரதிக்கு இந்தக் காரைக் கொடுத்துவிட்டார். அதிலிருந்து இந்தக் கார் அவரால் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அவர் சில ஆண்டுகள் கழித்து வேறொருவருக்கு அந்தக் காரை விற்றுவிட்டார். இப்படியே தொடர்ந்து கைமாறிய கார் நிஜந்தன் ஏழுமலை என்பவர் வசம் வந்திருக்கிறது. அப்போது அவர் மீண்டும் இந்தக் காரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் ஜெயலலிதா பயன்படுத்திய 1999 மாடல் டாடா சஃபாரி கார் ரூ.2.72 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்தக் காரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று அதிமுக பிரமுகர்கள் போட்டி போடுகின்றனர்.

டீசல் இன்ஜின் கொண்ட இந்தக் கார் ஜெயலலிதா வாங்கும்போதே ரூ.8.93 லட்சம் முதல் ரூ.11.08 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், சென்னை தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த காரின் இன்சூரன்ஸ் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி காலாவதியாகிவிட்டது. இந்தக் காரை வாங்குபவர்கள் தாங்களே இன்சூரன்சைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

Share this story