இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, இன்று மாற்றுத் தலைவர்களை அறிவித்தார் சபாநாயகர்

The Speaker passed the condolence resolution and announced the replacement leaders today

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

அதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். முதலில் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். அப்போது, 'காலை வணக்கம். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது ஊழலை அகற்றிவிடும். இது எனது செய்தி. தமிழ் இனிமையான மொழி' என்றார். 

தமிழுக்கு முன்னுரிமை :

மேலும், அவரது உரையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும், உழவர் சந்தைக்கு புத்துயிர், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றன. 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2-வது நாளான சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.

இரங்கல் தீர்மானம் :

கூட்டம் தொடங்கியதும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த நடிகர் விவேக்கிற்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தன் நடிப்பாற்றலால், நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர், அவரின் இழப்பு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாற்றுத் தலைவர்கள் :

எம்.எல்.ஏக்கள்  அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.

சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, திமுக உறுப்பினர் உதயசூரியன் முன்மொழிந்தார்.

Share this story