பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்.. இசைவிழாவில் 260 உடல்கள் மீட்பு..

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ‘‘இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் முழு பலத்தையும் பயன்படுத்தி, காசா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகள் செயல்படும் அனைத்து இடங்களையும் அழிப்போம். இந்த போர் நீண்ட காலம் நடக்கும்’’ என்றார்.
இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 40 மணிநேரம் கடந்த நிலையில், திங்கள்கிழமை காலையிலும் இஸ்ரேல் படையினர் தீவிரவாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா பகுதியில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தமாக இரண்டு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1100-ஐ கடந்துள்ளது.
முன்னறிவிப்பில்லாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் பலரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் இதுவரை காசாவில் 800க்கும் அதிமான இடங்களில் தாக்குல் நடத்தி இருப்பதாகவும், என்க்ளேவின் வடகிழக்கு மூலையான பெய்ட் ஹனோன் நரகம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே காசா பகுதியிலிருந்து 70,000 பாலஸ்தீனர்கள் வெளியேறி தாங்கள் நடத்தும் பள்ளிகளில் தஞ்சமைடந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. மேலும் காசா பகுதிகளுக்கு உணவு பொருள்கள் கொண்டு செல்ல மனிதாபிமான வழித்தடங்களை உருவக்க வேண்டும் என்றும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் காசா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்து ஒளிந்து கொண்ட 30 பேர் திரும்பி வந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இசைநிகழ்ச்சி நடந்த இடத்தில் 260 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், துப்பாக்கிச் சூட்டுக்கு நடுவில் இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் திறந்த வெளியில் ஓடுவது தெரிகிறது. பலர் அருகில் இருந்த பழத்தோட்டத்தில் பதுங்குகின்றனர் அல்லது தப்பிக்கும் போது சுட்டுக்கொல்லப்படுகின்றனர். ஹமாஸ் தீவிரவாதிகள் முதலில் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளனர்; பின்னர் துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர்.