ஆயுதம் ஏந்தா அகிம்சா யுத்தம் திக்கெட்டும் பரவும்; திசை யாவும் கிழக்காக மலரும்: ஓபிஎஸ் தரப்பு உறுதி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
தமிழக மக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறையாசனம் இட்டு அமர்ந்து இருக்கும் அண்ணா தி மு.க வை சேதாரமில்லாது செதுக்கி பாதுகாக்கிற தாயுமானவச் சிற்பியாக அம்மா அடையாளம் காட்டிய ஓ.பி.எஸ் திகழ்கிறார்;
ஒன்றரைக் கோடி தொண்டர்களையும் ஒற்றுமையால் கட்டி எழுப்ப உழைக்கிறார்.
யாரையும் தடித்த வார்த்தை கொண்டு இடித்துத் தள்ளாத இன்முகத்தால் தொண்டர்களின் இதயங்களை ஈர்க்கிறார்.
ஆனால்.. இடிஅமீன் எடப்பாடியோ ஜல்லி உடைப்பவன் போல் சாதிவாரியாக, மண்டலங்கள் வாரியாக தன் அதிகார வெறிக்காக கோடானு கோடி தொண்டர்களின் உழைப்பாலும் உதிரத்தாலும் உருவாக்கப்பட்ட அண்ணா தி மு க என்னும் அழகுக் கோட்டையை தகர்க்கத் துடிக்கிறார்.
இதனை தொண்டர்கள் புரிந்துகொண்டு விட்டனர். எடப்பாடியின் பின்னால் நிற்கும் மனச்சாட்சி கொண்டவர்களும் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர்.
இதனால், ஜல்லிக்கட்டு புரட்சியை போல் அ.தி.மு.க.விலும் ஒரு தொண்டர்கள் புரட்சி தொடங்கி விட்டது. இதனை எடப்பாடியின் கரன்சியாலும் தடுக்க முடியாது. அவருக்கு காவடி தூக்கும் கைக்கூலிகளாலும் நிறுத்த முடியாது.
அம்மாவே எங்கள் உலகம்; அவர் அடையாளம் காட்டிய ஓ.பி.எஸ் தான் எங்கள் கழகம் என்பதே ஒருமித்த தொண்டர்களின் குரலாக ஒலிக்கப் போகிறது.
கும்பினியர் கூட்டத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து, தங்கள் சிவகங்கை சீமையை மீட்டெடுத்த மருதிருவர் வேலுநாச்சியாரின் மீட்புப் போர் நிகழ்ந்த அதே காளையார் கோவிலில் கால் கொண்ட கழகத்தின் மீட்டெடுப்பு யுத்தம்... பசும்பொன்னில் கடலாக விரிந்து கனலாக பரவத் தொடங்கி விட்டது.
இந்த ஆயுதம் ஏந்தா அகிம்சா யுத்தம் திக்கெட்டும் பரவும்.. எங்களுக்கு திசையாவும் கிழக்காக மலரும்.
இந்த மகோன்னத முன்னெடுப்புக்கு மக்கள் திலகம்-மகராசி அம்மா ஆன்மாக்கள் பக்கத் துணை நின்று உதவும் என்பது சத்தியம்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.