எடப்பாடியின் 'கோமாளி' நிலையைக் கண்டு ஊரே சிரிக்கிறது: அமமுக விளாசல்..

தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத் தொடரில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்காததால், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இது முறையான செயலா? என்ற விவாதம் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து அமமுக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கே.எஸ்.கோனேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
தமிழக மக்கள் எதற்காக எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்கு அனுப்பினார்களோ அந்த வேலையை விட்டுவிட்டு, ஆர்.பி. உதயக்குமார் அவர்களுக்கு இருக்கை பிடிக்கின்ற வேலையில் இறங்கிவிட்டார்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்நாட்டின் பிரச்சனை என்ன என்ன இருக்கிறது.. அதைப் பற்றி பேசாமல், இருக்கைக்காக சட்டசபையை விட்டு வெளியேறியது கேலிக்கூத்தான செயலாகும்.
இதுதான் அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை வழிநடத்தும் லட்சணமா? இதுதான் ஒரு தலைவனுக்குரிய ஆளுமையா?
இந்த இயக்கம் இவர் கையில் இருந்தால் என்ன நிலைக்குச் செல்லும் என்பதை இதற்கு மேல் தமிழக மக்கள் புரிந்துகொள்ளத் தேவையில்லை.
இந்த இடத்தில் மக்கள் செல்வர் டிடிவி. தினகரன் இருந்தால், ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இந்த அவையில் ஒரு இயக்கத்தை எப்படி வழி நடத்திச் சென்றிருப்பார்.
தமிழகத்தில் இருக்கிற பிரச்சினைகளைப் பேசி, அதற்கு உண்டான தீர்வுகளைக் காண வேண்டும் என்று வலியுறுத்துவதை விட்டுவிட்டு, இப்படிப்பட்ட கோமாளி வேலையை எடப்பாடி செய்வது நகைப்புக்குரியது. ஆனால், அவரிடம் இருந்து இதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்.
திமுகவை எதிர்த்து எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு, அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் எடப்பாடியின் நிலையைக் கண்டு ஊரே சிரிக்கிறது.
'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு தொக்கு' என்னும் பழமொழிக்கு ஏற்ப, திமுக இன்று மக்கள் நலப. பணிகளை செய்யாமல் இதுதான் நமக்கு தேவை என்பது போல் இருக்கிறது.
இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்; இந்த கட்சியை வழிநடத்த மக்கள் செல்வர் டிடிவி, தினகரன் அவர்களை தலைமையாக ஏற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம் என்று.!' என தெரிவித்துள்ளார்.