எடப்பாடியின் மொத்த பாவங்களுக்கும் விடை தரும் வேளை : ஓபிஎஸ் தரப்பு உறுதி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
* தொண்டர்களை தொடர்ந்து அவமதித்துக்கொண்டே, தனது பணப் பண்ணையில் தீனி போட்டு வளர்க்கும் பொதுக்குழு ஆடுகளை மட்டுமே கட்டி அழும் எடப்பாடிக்கு நீதியுரை மதுரையில் தொண்டர்கள் பாடம் கற்பிப்பார்கள்.
* எடப்பாடி எதிர்ப்பது ஓ.பி.எஸ் ஒருவரை மட்டுமல்ல. மாற்றக்கூடாத விதி என்கிற மக்கள் திலகம் எம்ஜிஆரின் உத்தரவை உதாசீனம் செய்கிறார்.
அம்மாவை பெருமை செய்வதற்காக அவருக்கென நிரந்தரமாக விட்டு வைக்கப்பட்ட பொதுச்செயலாளர் எனும் கழகத் தொண்டர்கள் வழங்கிய காணிக்கையை களவாடுகிறார்..
பன்னீர்செல்வத்தை நான் தொண்டனாக பெற்றது என் பாக்கியம் என அம்மா உளமார வாழ்த்திய ஓ.பி.எஸ் என்கிற விசுவாசமிக்க கழகத்தின் பரதனை காயப்படுத்துகிறார்.
கூடவே, தனக்கு உதிரமும் உயிரும் கொடுத்த தனது ரத்தத்தின் ரத்தமான கழகத் தொண்டர்களுக்கு பொன்மனச் செம்மல் வழங்கிய பிரத்யேக உரிமையை பொதுக்குழுவை கொண்டு பிக்பாக்கெட் அடிக்கப் பார்க்கிறார்.
இப்படி, துரோகங்களால் தோரணம் கட்டுகிற எடப்பாடியின் மொத்த பாவங்களுக்கும் விடை தரும் வேளை அரிதாள் அறுக்கையில் மறுதாள் வளரும் தஞ்சைத் தரணியில் தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.