அரசியல் பரபரப்பு: துணை முதல்வராகிறார் உதயநிதி.?

By 
erasai11

'இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கினால், திமுக ஆட்சி மீது அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் மத்தியில் நிச்சயம் உருவாகும்' என மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான தேனி திருமலை தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்து இதுவரை ஏறத்தாழ 50 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இதையொட்டி, அந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, திமுக ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன; குறிப்பாக அந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களையும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.

இதனை ஆய்வு செய்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை, கள்ளக்குறிச்சிக்கு அவசரமாக அனுப்பி, கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு ஆறுதல் வழங்கிடவும் உத்தரவிட்டார்கள்.

அந்தப் பணிகளை, பல்வேறு எதிர்ப்புகளையும் முறியடித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செய்து முடித்து, மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றார்.

அதன் பிறகு, தனது குடும்பத்திலுள்ள முக்கிய உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக்குவது என்றும்.. உள்துறை (காவல் துறை) பொறுப்பை கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்குவது என்றும் முடிவுகள் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன; 

தற்போதுள்ள அரசியல் சூழலில், துணை முதல்வர் மற்றும் உள்துறை பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினால், அவர் ஒரு பொறுப்பு மிக்க தலைவராகவும் அமைச்சராகவும் தன்னை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என முதல்வரின் நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன.

எனவே, துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் எனவும்.. கள்ளச்சாராயம் அடியோடு ஒழிக்கப்படும் எனவும்...அரசியல் ஆய்வாளர்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழக முதல்வர் அவர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக்குவதோடு அவரிடம் உள்துறையையும் கொடுக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஓர் அமைதியான சூழ்நிலையும், திமுக ஆட்சி மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் மக்கள் மத்தியில்  நிச்சயம் உருவாகும். இதில், மாற்றுக் கருத்து எதுவும், யாருக்கும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன். இவ்வாறு மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான தேனி திருமலை குறிப்பிட்டுள்ளார்.
           
 

Share this story