செந்தில்பாலாஜியை விசாரணை செய்ய இயலவில்லை : கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு..

By 
edo

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்த போது நெஞ்சு வலி ஏற்பட்டதால், செந்தில் பாலாஜியை அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள், அவரது ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினர். இதனால் ஆஸ்பத்திரியில் இருந்த செந்தில் பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட் நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அவர் உடல்நலம் சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெறவும் உத்தரவிட்டார்.

பின்னர் இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆஸ்பத்திரியில் இருந்தபடியே 8 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கலாம். அவரை சட்ட விரோதமாக துன்புறுத்தக் கூடாது. உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும். உரிய சிகிச்சையும் வழங்க வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகளை நீதிபதி அல்லி பிறப்பித்தார்.

ஆனால் 5 நாட்களாகியும் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணை நடத்த இயலவில்லை. இந்த நிலையில் சென்னை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளனர். அதில் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாததால், அவரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க இயலவில்லை என்று கூறியுள்ளனர்.
 

Share this story