விஜயலட்சுமி புகார் : சீமானுக்கு, போலீசார் நேரில் சம்மன்..

By 
vl2

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த பாலியல் புகார் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். சீமானிடம் போலீசார் நேற்று இரவு நேரில் சம்மன் வழங்கி உள்ளனர். சென்னை பாலவாக்கம் சக்தி மூர்த்தி அம்மன் நகரில் வசித்து வரும் சீமானின் வீட்டுக்கு நேரில் சென்ற வளசரவாக்கம் போலீசார் அவரிடம் சம்மனை நேரில் வழங்கினர்.

விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே தாங்கள் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் இந்த சம்மன் சீமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து சீமான் இன்று போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீமான் இன்று ஆஜராகவில்லை என்றும் வருகிற 12-ந்தேதி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்றும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். இதன் மூலம் அன்று சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் சீமான் மீது விஜயலட்சுமிஅளித்துள்ள புகார் மீது போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள். இதனால் சீமான் மீது போலீசார் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயலட்சுமி அளித்துள்ள வாக்குமூலத்தில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறி இருந்தார். இதற்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 


 

Share this story