விஜய் அரசியல் பிரவேஷம்- கட்சி தொடங்குவது எளிது, தொடர்வதுதான் கடினம்: சீமான்.. 

By 
vj2

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு, நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதிகாரபூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்துள்ளார் விஜய். 

தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து மற்றக்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 

"கட்சி தொடங்குவது எளிது. தொடர்வதுதான் கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தது என்றாலும் யார் வேண்டும் என்றாலும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கிடையாது. முதலில் என்ன கோட்பாட்டை விஜய் முன்னிறுத்த போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் ஒரு நடிகர் தனது ரசிகர்களின் வாக்கை மட்டும் பெற்று அரசியலில் வென்று நாட்டை ஆள்வது என்பது கிடையாது. வெகுவான மக்களையும் ஈர்க்க வேண்டும். விஜய், மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயங்களை வெல்ல ஒரே ஆண்டில் முடியாது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டி வரும்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Share this story