விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், மாணவி ஸ்ரீமதியின் தாயார் தனது வேட்பு மனு தாக்கல்.. 

By 
srimathi3

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வருகின்ற 24ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 26ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். 

வாக்குபதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று  கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் துயரங்களை சந்தித்து வருவதாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தை சார்ந்த பொதுச்செயலாளர் ஆறுமுகம் வெள்ளை புடவை அணிந்தும், கையில் கரும்பு, பனை ஓலை, மஞ்சள் தாலியை ஏந்தி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் மனு அளித்தார்.

ரமேஷ் என்பவர் காந்தி வேடமணிந்து கையில் அசோக சின்னத்தை எடுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உட்பட இதுவரை 40 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைகிறது.

Share this story