கிராமசபைக் கூட்டம் : மக்களுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்

Village Council Meeting Chief Minister MK Stalin discussed with the people

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கிராமங்களைத் தவிர்த்து, அனைத்து ஊராட்சிகளிலும் இன்று (2-ந் தேதி) கிராம சபைக் கூட்டம் நடந்தது.

வரவேற்பு :

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்திலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடந்தது. 

இதில், பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து பாப்பாபட்டி கிராமத்துக்கு சென்றார்.

நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி உள்ளிட்ட வழி நெடுகிலும் சாலையோரம் இருபுறமும் பொதுமக்கள்-தி.மு.க.வினர் கூடி நின்று முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

கலந்துரையாடல் :

பாப்பாபட்டி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கிராம மக்கள் வரவேற்றனர். அங்கு கிராமசபை கூட்டத்துக்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்புறம் திரளான கிராம மக்கள் அமர்ந்திருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

ஊராட்சி நிதி செலவினம், கொரோனா தடுப்பூசியின் அவசியம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பாப்பாபட்டி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் 

நிதி செலவின விவரங்கள், ஊட்டச்சத்து இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துதல், கிராம சுகாதார திட்டம், மின்சார சிக்கனம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கிராம மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

கதர் விற்பனை :

அதன் பிறகு முதல்வர் மதுரைக்கு வரும் வழியில் கே.நாட்டார்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று கூட்டுறவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்கு 20 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் பால் மாட்டு கடன் உதவிகள் வழங்கினார்.

பின்னர், மதுரை வந்த மு.க.ஸ்டாலின் மேலமாசி வீதியில் உள்ள மகாத்மா காந்தி மேலாடையை துறந்த இடத்துக்கு சென்றார். அங்கு காந்தி ஜெயந்தி தினமான இன்று காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கதர் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள் மற்றும் அவர் செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Share this story