இந்தியாவுக்கு விடியல் தரப்போறாங்களாம் : கவர்னர் தமிழிசை கிண்டல்

By 
tamilisai8

புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீரை வாங்கி கொடுத்து விடியலை கொடுக்க முடியவில்லை. இப்போது இந்தியாவுக்கு விடியல் கொடுக்கப்போகிறோம் என்கிறார்கள். அதை கேட்டால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.

கர்நாடகத்தில் இவர்கள் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கும் கூட்டணி யாகத்தான் இருக்கிறார்கள். கர்நாடக முதல்- மந்திரியிடம் பேசி காவிரி தண்ணீரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஒரு மாநிலத்திற்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்து விடியல் தர முடியாதவர்களால் இந்தியாவுக்கே எப்படி விடியலை கொடுக்க முடியும்.

மும்பையில் கூடி ஆலோசித்து இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றை செய்ய மறந்துவிட்டார். முன்பெல்லாம் இந்தி தெரியாது போடா என்ற பனியனை தான் அணிந்து கொண்டு இருந்தார்கள். இப்போதும் அப்படியே அணிந்து தான் மும்பைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை.

இப்படி பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூத்துக்களை பார்க்கும்போது 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்றானாம்' என்ற கதையில் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் நாங்களெல்லாம் சேர்ந்து இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என்று கைகோர்த்து இருக்கிறார்கள்.
 

Share this story