விஜய்யை ஆதரிப்பது பற்றி பின்னர் முடிவு செய்வோம் : உதயநிதி பேட்டி

By 
udhaya55

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

'மாமன்னன் முழுக்க முழுக்க அரசியல் படம். அப்பா பையன் கதை. அப்பா கேரக்டரில் வடிவேலு நடித்துள்ளார். கதைப்படி வடிவேல் தான் ஹீரோ. நடிகர் வடிவேலை வைத்து படம் எடுக்க மாரி செல்வராஜ் மிகவும் பயந்தார். காரணம் அவர் வடிவேலுவின் தீவிர ரசிகர் ஆவார். நான்தான் சமாதானப்படுத்தி வடிவேலுவுடன் பேசி படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.

ஜாதி மறுப்பு உள்ள படம். தேவர் மகன் படத்தோடு இந்தப் படத்தை ஒப்பிட்டு பேசுவது தவறு. நல்ல விஷயங்கள் நிறைய இந்தப் படத்தில் கூறியுள்ளோம். கால சூழ்நிலைகள் மாறும். முதலில் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றேன். பின்பு நடித்தேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். அரசியலுக்கு வந்து அமைச்சராகிவிட்டேன். எனக்கான மக்கள் பணி காத்திருக்கிறது. இது எனது கடைசி படம்.

இதற்குப் பிறகு படம் நடிப்பது பற்றி யோசிக்கக்கூட எனக்கு நேரமில்லை. மாமன்னன் படத்திற்கு பிறகு நடிகர் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். சூட்டிங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. திடீரென முதல்-அமைச்சர் என்னை கூப்பிட்டு அமைச்சர் பதவியை ஏற்க சொன்னார். இந்த தகவலை உடனடியாக கமல் சாரிடம் பயந்து பயந்து சொன்னேன். உடனடியாக அவர் இதைவிட முக்கியம் உங்களுக்கு அமைச்சர் பதவிதான். உங்களுக்கான கதை என்றும் காத்திருக்கும். நீங்கள் அமைச்சராகுங்கள் என்று சொன்னார்.

கடைசி படமான மாமன்னனில் மனநிறைவுடன் நடித்துள்ளேன். நான் ஆசைப்பட்டு பண்ணிய படம் மாமன்னன். தாத்தா கலைஞரை பார்த்து நிறைய வியந்து உள்ளேன். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தினமும் அதிகாலை எழுந்து பேப்பர் படித்து, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அந்த செய்தி பற்றி கேட்பார். அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவார். மாவட்ட செயலாளர்களிடம் பேசுவார். உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார்.

உடன் பிறப்பே என்று கடிதம் எழுதுவதுடன், அவரை பார்க்காத அரசியல் தலைவர்களே இல்லை. அவர் சாதித்ததில் ஒரு சதவீதமாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை பின்பற்றியது இல்லை.

அரசியல் வருகை குறித்து விஜய் இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதலில் அறிவிக்கட்டும். அரசியல் கொள்கைகளை தெரிவித்தால் விஜய்யை ஆதரிப்பதா? வேண்டாமா என்று முடிவு செய்வோம்.

எனது மகன் இன்பநிதிக்கு இப்போதுதான் 18 வயது ஆகிறது. 18 வயதில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவது வராதது அவரது விருப்பம். அவரது சுதந்திரத்தில் நானும் எனது மனைவியும் தலையிடுவதில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
  

Share this story