விஷம் குடிச்சு செத்தாலும் சாவமே தவிர, இபிஎஸ் பக்கம் செல்லமாட்டோம்: மருது அழகுராஜ்..

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு என மருது அழகுராஜ் ஆவேசமாக கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்..,
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்சை தடித்த வார்த்தைகளால் பேசியுள்ளார். இபிஎஸ் சூடு சுரணை என்றெல்லாம் பேசுவதற்கு அருகதையற்றவர். அவர் முதலமைச்சராக நான்கரை வருடங்கள் இருந்ததற்கு ஆதரித்தவர் ஓபிஎஸ். ஆட்சி முடிகிற வரை அண்ணன் அண்ணன் என்று ஊலைக் கும்பிடு போட்டுவிட்டு, முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது ஓபிஎஸ் காலில் விழுந்து வணங்கிவிட்டு, இன்று திமுகவின் பி டீம் என்று சொல்கிறார்.
ஜெயலலிதாவின் ஜீவ நாடி என்பது திமுக எதிர்ப்புத்தான். மூச்சை விடும் வரை திமுக எதிர்ப்பில் சமரசம் செய்து கொள்ளாதவர் ஜெயலலிதா. அவரே தனக்கு சோதனை வந்தபோது, தனது தலைப்பாகையை நம்பி இறக்கி வைத்த இடம் ஓபிஎஸ்ஸின் மடி தான்.
இன்று கத்தை பணத்தை களத்தில் இறக்கி மொத்த தமிழகத்தையும் விலைக்கு வாங்குவேன் என்ற முஸ்தீபுகளில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இந்திய அரசியலில் ஒரு அரசியல் தலைவருக்கு இத்தனை தீர்ப்புகள் நீதிமன்றத்தில் இருந்து சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததில்லை என்ற சரித்திரத்தை எடப்பாடி படைத்துள்ளார்.
ஒரு நாள் இரவில் அதிபராகி விட்டதாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த தீர்ப்புகள் அனைத்தையும் குறைபாடு உள்ள தீர்ப்பாகவே பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதே தவிர, மக்கள் மன்றம் அங்கீகரிக்கவில்லை. ஓபிஎஸ் சென்ற இடமெல்லாம் சிறப்பு, எடப்பாடி சென்ற இடமெல்லாம் செருப்பு என்பதுபோல் ஒற்றை செருப்பு அவரை வரவேற்றது.
அவருக்கு பின்னால் இருக்கக்கூடிய சட்ட பின்புலம் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. ஏறத்தாழ ஒரு டஷன் தீர்ப்புகள் அவருக்கு சாதகமாக வந்துள்ளது. கொடநாடு குறித்து யாரும் பேசக்கூடாது என்று ஒரு தீர்ப்பு வாங்குகிறார். அதற்கு பிறகு கொடியை யாரும் பயன்படுத்த கூடாது என்று ஒரு தீர்ப்பை வாங்குகிறார். மக்கள் மன்றத்தில் நடத்துவதற்கு பதிலாக நீதிமன்றத்தை வைத்து நடத்தி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது. அவருக்கு எதிரான எந்த வழக்கையும் திமுக நடத்தவில்லை.
மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு என்னோடு சேர்ந்துகொள்ளலாம் என்று இபிஎஸ் சொன்னார், இதுவரை எத்தனை மன்னிப்பு கடிதம் வந்துள்ளது என்பதை சொல்வாரா? விஷம் குடித்து செத்தாலும் சாவோம், இபிஎஸ் பக்கம் செல்ல மாட்டோம் என மருது அழகுராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.