இனி, செத்தாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: அதிமுக அதிரடி..

By 
seeni

பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அறிவித்தார். இதனை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ததை அடுத்து  அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், மேடைக்கு மேடை அதிமுக தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன்;- நம்முடைய சைத்தான் மற்ற விஷயங்களை எல்லாம் சொல்லி என்று உங்களால் சொல்லப்படுகின்ற அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி உங்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்போ அந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம்.  இனிமேல் பள்ளிவாசல் தெரு, அரசமரத்து தெரு, ஜமாத் தெருவாக இருந்தாலும் சரி, இனி பாஜக உடன் கூட்டணி இருப்பவர்கள் ஓட்டு கேட்டு வராதே என்று இனி யாரும் சொல்ல மாட்டார்கள்.

பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி. கூட்டணி முறிவால் எடப்பாடி பழனிசாமி 1000 மடங்கு மகிழ்ச்சியாக உள்ளார். தேர்தலுக்கு பிறகு சேர்ந்து கொள்வார் என்று பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் ஒன்றை நன்றாக பிரிந்து கொள்ளவேண்டும்.

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பதை நாங்கள் ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  இனி செத்தாலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

Share this story