பலவீனம் தெரிகிறது, ஒற்றுமையாக இருங்கள் : சோனியா பரபரப்பு பேச்சு

By 
Weakness seems, be united Sonia's provocative speech

5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, இன்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டினார்.

இந்த கூட்டம், இன்று காலை தொடங்கியது. சோனியா காந்தி தலைமை தாங்கினார். 

ஒற்றுமை வேண்டும் :

ராகுல்காந்தி மற்றும் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். 5 மாநில தேர்தலை எப்படி சந்திப்பது என்று விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில், சோனியா காந்தி பேசியதாவது :

காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் இருந்து தீவிரமாக நாம் வளர்க்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகமும், அரசியல் சாசன சட்டங்களும் நாட்டுக்கு முக்கியத்துவம் கொண்டது. 

ஆனால் இன்றைய ஆட்சியில் அவை வீழ்த்தப்பட்டு வருகின்றன. இதை முறியடிக்க வேண்டும்.

இது சம்பந்தமாக, மக்களிடம் நாம் பிரசாரத்தை கொண்டு சேர்க்க வேண்டும். நமக்கு எதிராக நடக்கும் தவறான பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்.

கட்சியில் உள்ள அனைவரும் தங்களுடைய விருப்பு, வெறுப்புகளை மறந்து கட்சிக்காக பாடுபட வேண்டும்.

பலவீனம் தெரிகிறது :

கட்சியில் கட்டுப்பாடு, ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானது. இவை இருந்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியும். எனவே அதன்படி, அனைவரும் செயல்பட முன்வர வேண்டும்.

காங்கிரசின் கொள்கைகளை அடிமட்ட அளவில் கொண்டு சேர்க்க வேண்டும். 

இந்த வி‌ஷயத்தில், நம்மிடம் பலவீனம் தெரிகிறது. அதற்கு இடம்கொடுக்காமல் மக்களோடு மக்களாக இருந்து செயல்பட வேண்டும்.

போராட வேண்டும் :

அரசின் தவறான செயல்களை எதிர்த்து, கடுமையாக போராட முன்வர வேண்டும்.

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதை முறியடிப்பதற்கு நாம் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். கருத்து ரீதியாக அவர்களை எதிர்த்து போராட வேண்டும்.

இந்த போரில், நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்களின் பொய் பிரசாரங்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்.

தேசம் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்த தகவல்களை அடிமட்ட மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்த அரசு ஜனநாயகத்தின் அடிப்படைகளையே கேள்விக் குறியாக்கி இருக்கிறது. அரசாங்கத்தின் அத்து மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நமது போராட்டத்தை இரட்டிப்பாக்க வேண்டும். 

விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் போராட்டம், வேலை வாய்ப்பு இழந்த இளைஞர்கள், சிறு நடுத்தர வணிகர்கள், நமது சகோதர- சகோதரிகள், தாழ்த்தப்பட்டவர்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

5 மாநில தேர்தலில் அனைத்து பிரிவினரிடமும் நமது கொள்கைகள், திட்டங்கள் சென்றடையும் வகையில் பிரசாரங்கள் அமைய வேண்டும்' என்றார்.

Share this story