ஹமாஸ்-இஸ்ரேல் போரும், பெரியார் சிந்தனைகளும் உணர்த்துவது என்ன?

By 
ammk2

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளதாகவும், 4,250 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந்தவர்கள் காசா மருத்துவமனைகளில் குவிந்துவருகின்றனர்.

குறைந்த எண்ணிக்கையிலேயே காசாவில் மருத்துவமனைகள் இருபப்தால், ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வரும்நிலையில் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பிடம் மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளது. இதற்கிடையே, போர் முடியும் வரை இஸ்ரேலிடம் இருந்து பணயக் கைதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் பயங்கரவாதக் குழு அறிவித்துள்ளது.

4-வது நாள் தொடர் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயம் அடைந்துள்ளனர். காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில், 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கே.எஸ். கோனேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வலியுறுத்தி கூறிருப்பதாவது :

ஹமாஸ் குழு-இஸ்ரேல் இருவருக்கும் நடக்கும் போருக்கு ஆழமான காரணம் என்ன? நன்றாக ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய பின்னணி மதம்.

ஒரு மனிதன் மதம் என்னும் சிந்தனையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இன்று ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய அந்த நிகழ்வுக்கு எது காரணம்? மதவெறி என்கிற பேய் தான். இதை நன்கு யோசித்ததன் காரணம் தான் பெரியாரின் சிந்தனைகள். நன்கு யோசித்துப் பாருங்கள், பெரியாருக்கு கடவுளின் மீது எந்த தனிப்பட்ட கோபம் இருக்க முடியும்? 

ஒரு மனிதன் தன்னை முழுமையாக மதத்தின் மீது ஆட்படுத்திக் கொண்டால் இப்படிப்பட்ட விபரீத விளைவுகள் தான் நடக்கும். இதை அன்றே உறுதி செய்த பெரியார், சிறந்த சமூக சிந்தனைகளை தமிழர்களாகிய நம் மீது விதைத்தார். 

நீ உன் வீட்டில் கடவுளை வைத்துக்கொள்.

ஆனால், நீ சமூகத்திற்குள் வந்தவுடன் நீ அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு மனிதனாக தன் சக மனிதர்களை நேசி. அவர்கள் எப்போதும் சமம் என்று பார். ஜாதி மதம் என்று உருவாக்கிக் கொண்டு உனக்குள் சண்டைகளை போட்டுக்கொண்டு சமூக வளர்ச்சியை கெடுத்து விடாதே என்று கூறினார் பெரியார். 

இவரின் சிந்தனைகள் தான், இன்று தமிழகத்தை பெரும்பாலும் எல்லா துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவரை வெறும் கடவுள் மறுப்பாளராக புரிந்து கொள்ளாமல், அவரின் கருத்துகளுக்கு காரணம் சமூக வளர்ச்சிதான் என்பதையும் சமூக ஒற்றுமை தான் என்பதையும், இன்று தமிழ்நாடு ஒரு வளர்ந்த மாநிலமாக இருப்பதற்கு பெரியார் ஒரு முக்கிய காரணம் என்பதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் போற்றிப் புகழ வேண்டும்.' என வலியுறுத்தியுள்ளார்.  

Share this story