செந்தில்பாலாஜி வழக்குக்கு தீர்ப்பு எப்போது?; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..

By 
sbi1

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் போட்டுள்ள வழக்கு விசாரணையும் சூடு பிடித்துள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் போடப்பட்டு உள்ள இந்த வழக்கு விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 16-ந் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர்.

இதனை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு கடும் அதிருப்தி அடைந்தது. ஏற்கனவே வழங்கிய 2 மாத அவகாசம் முடிந்துள்ள நிலையில் அதைவிட 3 மடங்கு கால அவகாசம் கேட்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் நினைத்தால் ஒரு வழக்கு விசாரணையை 24 மணி நேரத்திலும் முடிக்கலாம். 24 ஆண்டுகள் ஆனாலும் முடிக்காமல் இழுக்கலாம் என்று தெரிவித்தனர்.

எனவே உங்கள் டி.ஜி.பி.யையும் உள்துறை செயலாளரையும் நேரில் வரச் சொல்லுங்கள். இன்னும் எத்தனை நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்கட்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ½ மணி நேரம் அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் கோர்ட்டுக்கு வந்து முறையிட்ட போலீசார் மேலும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டதுடன் டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து டி.ஜி.பி.யும் உள்துறை செயலாளரும் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்ற நீதிபதிகள், 3 மாதம் அவகாசம் வழங்க முடியாது என்றும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதற்குள் நீங்கள் முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வு விசாரணை உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
 

Share this story