விஜய், அரசியலுக்கு எப்போது வருவார்? : புஸ்ஸி ஆனந்த் பேட்டி

By 
ba3

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த தகவல்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்குவது போன்ற நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கடந்தவாரம் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

அந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தது மட்டுமின்றி நாளைய வாக்காளர்களான ஒவ்வொரு மாணவர்கள் தான். பெற்றோர் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய தலைவர்கள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, திருவான்மியூரில் உள்ள புத்திராங்கன்னி அம்மன் கோயிலில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த்,

"நடிகர் விஜய் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளார். அதே நேரத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவருக்காக நானோ, மற்றவர்களோ முடிவெடுக்க முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் அதை விஜய் தான் எடுப்பார்" என்றார்.
 

Share this story