தி.மு.க.வின் பி டீம் யாரு.? : ஓபிஎஸ் தரப்பு அதிரடி விளக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
* அண்ணா திமுக.வின் முதல் வெற்றியை மாயத்தேவர் மூலம் தந்து தலைப்பிரசவத்தை சுகப்பிரசவமாக்கிய தென்னாட்டு மக்களை இழிவுபடுத்தவே...
எடப்பாடி மதுரைக்கு வந்து மாநாடு நடத்துகிறார் என்றால்.. இதற்கான பதிலடியை 2024 ல் எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனிக்கு மானரோசமுள்ள மக்கள் நிச்சயம் தந்து கணக்குத் தீர்ப்பார்கள்.
* எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் 2021-ல் தி.மு.க. நிறுத்திய வேட்பாளர் சம்பத்குமாரை யாருக்காவது தெரியுமா?
எடப்பாடியை எதிர்த்து முத்துச்சாமி, செல்வகணபதி போன்ற செல்வாக்கு படைத்தவர்களை நிறுத்தி எடப்பாடியை தோற்கடிக்க முயலாமல் பரிட்சயமில்லாத வேட்பாளரை தி.மு.க. நிறுத்தியது எதற்காக.?
அதேபோல்.. கொளத்தூர் தொகுதியில் 2011 சட்ட மன்ற தேர்தலில் புரட்சித்தலைவி அம்மாவால் களமிறக்கப்பட்டு மு.க. ஸ்டாலினை தண்ணி குடிக்க வைத்த சைதை துரைசாமியை அங்கே நிறுத்தாமல், தொகுதிக்கே சம்பந்தமில்லாத ஆதிராஜாராம் என்கிற பலவீனமான வேட்பாளரை 2021-ல் நிறுத்தி மு.க. ஸ்டாலினுக்கு அனுசரனையாக எடப்பாடி நடந்து கொண்டது ஏன்.?
அதுமட்டுமின்றி..சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக.. வலுவான வேட்பாளரை நிறுத்தாமல் தொகுதியை பா.ம.க.வுக்கு தள்ளிவிட்டு கசாலி என்பவர் வேட்பாளராக்கப்பட்டதோடு,
அவருக்கு உரிய அளவில் தேர்தல் செலவுக்கான பணமும் தரப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டதே அது ஏன்.?
அதே சமயம், ஓ.பி.எஸ் போட்டியிட்ட போடி தொகுதிக்கு மட்டும் தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி.யும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்கதமிழ் செல்வன் நிறுத்தப்பட்டதோடு அவருக்கு தி.மு.க.வும் கனத்த தொகை கொடுத்தது.
அதைவிட, கனத்த தொகையை தங்கதமிழ்ச் செல்வனுக்கு எடப்பாடி தரப்பில் இருந்து ரகசிய பட்டுவாடா செய்யப்பட்டு, எப்படியாவது ஓ.பி.எஸ்ஸை தோற்கடித்துவிடு என்று தங்க தமிழ் செல்வனிடம் எடப்பாடி தொடர்பு கொண்டு பேசினாரே..
இல்லை என்று எடப்பாடி தன் மகன் மீது சத்தியம் செய்து மறுக்க முடியுமா.?
இப்படியாக..எடப்பாடி-ஸ்டாலின் இடையிலான இரு தரப்பு ஒப்பந்த அரசியல் காரணத்தால்தான் சம்பந்தி மீதான 4500 கோடி டெண்டர் முறைகேடு தொடங்கி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு வரை அத்தனை விவகாரங்களும் ஆளும் தி.மு.க. அரசால் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.
இப்பச் சொல்லுப்பா.. தி.மு.க. வின் பி டீம் யாரு..?
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.