பாரத அன்னையை பாஜக கொலை செய்ததாக பேசியது ஏன்? : ராகுல் விளக்கம்

By 
rahul222

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மணிப்பூர் பற்றி எரிந்து, கொலைகளும், பாலியல் கொடுமைகளும் நடைபெறும்போது பிரதமர் மோடி ஜோக் அடித்து வருகிறார். மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்று தான் பிரதமர் நினைக்கிறார். அதை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மணிப்பூரில் பாரத அன்னையை கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டேன். மணிப்பூர் இன்று ஒரே மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலமாக பிளவுபட்டு கிடக்கிறது. அதனால்தான் மணிப்பூரில் பாஜக, பாரத அன்னையை கொலை செய்துவிட்டது என்று குறிப்பிட்டேன்.

பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை, பெண்களை கிண்டல் செய்கிறார். நான் பல பிரதமர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு பிரதமரை பார்த்ததில்லை. பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என்பது எனக்கு தெரியும், ஆனால் பொதுவெளியில் சொல்ல இயலாது.

பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதம் பிரதமர் பற்றியது அல்ல, மணிப்பூரை பற்றியது. நான் பேசிய பாரத மாதா என்ற வார்த்தைகள் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் என்ன நடக்கிறது என்று பிரதமருக்கு தெரியவில்லை. அரசியலில் 19 ஆண்டு காலமாக இருக்கும் நான் பல மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் நான் கேட்டது, பார்த்தது எல்லாம் அசாதாரணமானது.

மணிப்பூரில் அரசு ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதை மாநில முதலமைச்சரால் தடுக்க முடியவில்லை. மணிப்பூரில் நடப்பவற்றை இந்திய ராணுவத்தால் 2 நாட்களில் நிறுத்த முடியும். எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதன் மூலம் எங்கள் நடவடிக்கையை நிறுத்த முடியாது. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த தேவையான அனைத்தும் பிரதமரிடம் உள்ளன. ஆனால் அதனை செய்ய மறுக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமரின் கைகளில் பல சாதனங்களும் கருவிகளும் உள்ளன. ஆனால் அதனை அவர் பிரயோகிப்பதில்லை. பாரத அன்னை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். பாராளுமன்றத்தில் 2 மணி நேரமாக உரையாற்றிய பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பிரதமர் என்பவர் கட்சி தலைவரை போன்று அரசியல் செய்ய கூடாது. பிரதமர் பொதுவானவராக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story