திமுக தயங்குவது ஏன்? : அன்புமணி ராமதாஸ் கேள்வி

manir

திண்டுக்கல்லில் இன்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம்கூறியதாவது, தமிழக அமைச்சரை பொருத்தவரை மதுபான விற்பனையை வைத்துதான் தமிழக வளர்ச்சி என்கிறார். எங்களை பொறுத்தவரை தமிழகத்துக்கு அது அவமானம். தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் முதல் நாள் முதல் கையெழுத்து மது கடையை மூடுவோம் என்றார்கள். மூடினார்களா? தமிழ்நா ட்டில் 3 கோடி பட்டதாரி இளைஞர்களுக்கு மேல் வேலை இல்லை. தமிழகத்தை எங்களிடம் 5 ஆண்டுகள் மட்டும் கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு இழுத்து செல்ல எனக்கு போதிய அனுபவம் உள்ளது.

அ.தி.மு.க., தி.மு.க.வால் புதிதாக எதையும் கொடுக்க முடியாது. தற்போது தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு அரசாணை வெளியிட்டார்கள். அதில் திருமண மண்டபங்கள், சர்வதேச மாநாடுகள், விளையாட்டு மைதானங்களில் மதுவை சப்ளை செய்யலாம் என்பதுதான்.

சென்னையில் பெரிய மதுபான கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம், என்ன மனநிலையில் இந்த அரசாணையை கொண்டு வந்தீர்கள். அதனை எதிர்த்து பா.ம.க. வழக்கு போட்டு தடை ஆணை பெற்றது. தி.மு.க.வின் நிறுவனர் அண்ணாவின் கொள்கையே பூரண மதுவிலக்கு தான். அதன் வழியில் வந்த தி.மு.க. பூரண மது விலக்கை அமல்படுத்த தயக்கம் காட்டுவது ஏன்?

தற்போது 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி மசோதா நிறைவேற்றி உள்ளனர். 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதை பா.ம.க.தான் முதன்முதலில் எதிர்த்தது. தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கொள்கைகளில் இதுவும் ஒன்று அதனால் கவர்னர் இதற்கு கையெழுத்திடுவார். அதனை எப்போது வேண்டுமானாலும் இந்த அரசு கொண்டு வரும்.

தமிழ்நாட்டில் தனியார் துறைகளில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க சட்டம் இயற்ற வேண்டும். சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் 15 நாட்கள்தான் தற்போது நடத்துகின்றனர். சபாநாயகர் என்பவர் நடுநிலைமையான ஒருவராக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு 25 சதவீதம் எதிர்க்கட்சியினருக்கு 75 சதவீதமும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும். மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு முழு ஆதரவு தருகிறோம். அதேபோல் மதம்மாறிய வன்னியர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் மாபியாவால் வி.ஏ.ஓ படுகொலை செய்யப்பட்டார். எனவே எம்சாண்ட் அதிகளவில் பயன்படுத்தினால் ஆற்று மணல் பயன்பாடு குறையும். தமிழகத்தில் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தன. ஆனால் தற்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. தமிழக அரசு நீர்மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். சட்டமன்ற கடைசி நாளில் அவசர அவசரமாக 15 சட்டமசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க சமூகநீதி குறித்து அதிகளவில் பேசி வரும் நிலையில் தனியார் நிறுவனங்களுக்கே ஆதரவாக செயல்படுகின்றனர். தென் மாவட்டத்தில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் 620 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. உலகளவில் இயற்கை சீற்றம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story