காங்கிரசுக்கு சந்தேகத்துக்குரிய மவுனம் ஏன்? : பினராயி விஜயன் விமர்சனம்

By 
civil2

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த மாதம் 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து பிரதமர் மோடி பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது.

இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பொதுசிவில் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக, சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது.

அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதி பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க. பேன்ற உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை கூறவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் மவுனம் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ''போது சிவில் சட்டத்தில் காங்கிரஸ் தெளிவான நிலையை கொண்டிருக்கிறதா? அவர்களுடைய சந்தேகத்திற்குரிய மவுனம் வஞ்சகமானது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீது சங் பரிவார் தாக்குதல் நடத்தும்போது, அதை தடுப்பதற்கு காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயாராக உள்ளதா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

Share this story