கேப்டன் விஜயகாந்துக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படுமா?

By 
vivi1

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு முழு உருவச் சிலை வைக்கக்கோரிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு மதுரை மேயர் கடிதம் எழுதியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்திற்கு முழு உருவசிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். மதுரையில் முக்கியமான பொது இடம் ஒன்றில் சிலை நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

அவரது கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சிலை அமைப்பது குறித்து மாவட்ட அமைச்சர்களிடம் கலந்தாலோசித்து தமிழக அரசிடம் தெரிவிப்பதாகவும் மேயர் இந்திராணி உறுதி அளித்திருக்கிறார்.

விஜயகாந்த் மறைவுக்குப் பின் அவரது இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கத்தின்போது தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து பாராட்டு பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story