புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அழுத்தம் கொடுப்போம்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

By 
pudpud

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர, அதிமுக அழுத்தம் கொடுக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர அ.தி.மு.க. அழுத்தம் கொடுக்கும் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நிற்கும் நிலை உள்ளது. புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு கூட புதுச்சேரி ஆளுநர் அனுமதி தரவில்லை. 

புதுச்சேரியில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. வாக்குறுதி கொடுத்தால் அதை செயல்படுத்த ஆளுநரின் அனுமதி தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதல்வருக்கு அதிகாரம் உள்ளதுபோல், புதுச்சேரியிலும் கிடைக்க அ.தி.மு.க. போராடும். ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. மூடிக் கிடக்கும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை, நூற்பாலையைத் திறக்க அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தைப் போல, புதுச்சேரியிலும் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் சிறுமி கொலைக்கு போதைப்பொருள் நடமாட்டமே காரணம்." என்றார்.

Share this story