என் உயிரினும் மேலான பெண்களே, முடிவெடுங்கள்: சமூக ஆர்வலர் கவிஞர் அ.திருமலை வேண்டுகோள்..

By 
tasmac7

வருகிற ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறப்போகும், இந்தியப் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இந்திய வாக்காளர்கள் தயாராகி வருகிறார்கள்;  இந்த நேர தேர்தலில், போட்டியிடப் போகும் தேசியக் கட்சிகள் எதுவும் இந்தியாவில் முழு மதுவிலக்குக் கொண்டு வருவோம் என உறுதி அளிக்கவில்லை' என எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான கவிஞர் அ.திருமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'ஒவ்வொரு ஆண்டும் புதிய மது ஆலைகளை அதிகரிப்பது, மதுக்கடைகளை அதிகரித்துக் கொண்டே போவது, மது விலைகளை பலமடங்கு ஏற்றுவது, என்பவற்றைக் கொண்டு வந்து, மக்கள் உயிர்களைக் காவு வாங்கிய மத்திய மாநில அரசுகளின் ஆட்சி அவலங்களை நினைத்துப் பார்த்து, இம்முறை மக்கள் வாக்களிக்க வேண்டும். 

வங்கிகளைத் தேசிய மயமாக்கியவர்களுக்கு, மது ஒழிப்பை தேசிய மயமாக்குவதும் எளிதான ஒன்றுதானே? மக்கள் உயிரைப் பணயம் வைத்து, ஆட்சி அதிகாரம் செய்வதற்கு யாருமே இங்கே வெட்கப்பட அஞ்சுவதில்லையே? அது ஏன்? 

மக்களை ஏமாற்றுவதும், மானத்தை விடுவதும் ஒன்றுதானே? இதைப் பற்றிச் சிந்திக்க தேசியத் தலைவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது?

அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு, எத்தனையோ வழிகள் இருக்கும்போது, தாய்மார்களின் தாலியை விலை பேசும் இந்த  'மது அரசியல்' இந்திய நாட்டுக்குத் தேவைதானா? 

கடந்த 75 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தேசிய கட்சிகளும் கூட்டணி அமைத்துக் கொண்டு பாரத நாட்டை ஆண்ட இலட்சணம் இதுதானா? இதில், மாநில ஆட்சிகளின் லட்சியம் என்ன?

இந்திய மண்ணில் இருந்து, மதுவை விரட்டிடவும், இந்திய இறையாண்மைக்கு எதிரான மதுவை ஒழிப்பதற்கும் எந்தக் கூட்டணி கட்சி உறுதிமொழி அளிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு மட்டுமே  'இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம்' என்ற உறுதியோடு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

இதுவே, வாக்களிக்கப் போகும் மக்களுக்கு குறிப்பாக, என் உயிரினும் மேலான பெண்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்'  என சமூக ஆர்வலர் கவிஞர் அ. திருமலை வலியுறுத்தியுள்ளார்.
 

Share this story