'நெல் கொண்டு நீ வா.. உமி கொண்டு நான் வருகிறேன்' என்கிற பா.ஜ.க.வுக்கு ஓபிஎஸ் தரப்பு அறிவுறுத்தல்

By 
umi

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், 'ஆசை தோசை அப்பளம் வடை'  என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தமிழ்நாட்டில் தாங்கள் கரையேற உதவுதற்கு, அதிமுக என்கிற படகு மட்டுமே உதவும் எனும்போது அதன் மீது பா.ஜ.க. ஆட்சி தலைமைச் செயலகம் தொடங்கி, அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள் வரை.. 

மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளை ஏவிவிட்டு சோதனைகள் என்னும் பேரில் சேறு அள்ளி பூசியிருக்கக் கூடாது.

திராவிடக் கட்சிகள் என்னும் பொதுப்பதத்தை பயன்படுத்தி பா.ஜ.க. அதிமுக வை விமர்சித்ததும் தவறு. படகை இரு துண்டாக உடைத்து, அதில் ஒரு துண்டுக்கு மட்டும் துணை நின்று தூபமிட்டு வருவதும்..

அதுவும், ஆட்சியில் இருந்தபோதும் ஆட்சியை இழந்தபோதும் தொடர் தோல்விகளை மட்டுமே மக்களிடம் கொள்முதல் செய்து வரும் எடப்பாடியின் எடுபடாத தலைமையிலான பிளவை மட்டுமே தொடர்ந்து ஆதரிப்பதும் பெரும் தவறு.

ஒருவேளை, ஒன்றுபட்ட அதிமுக என்றால் அவர்கள் தருகிற எண்ணிக்கைக்கு தாங்கள் கையேந்த வேண்டியிருக்கும் என்பதால்,

அதுவே அதிமுக பிளவுற்றுக் கிடந்தால் பாஜக தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அதிமுக வின் பிளவுகளுக்கு மிச்சம் மீதியை பங்கு பிரித்துக் கொடுக்கும் அளவில், தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை கணக்கில்கொண்டு  அதிகார தோரணையில் பா.ஜ.க.நடந்துகொள்வது நல்லதும் அல்ல.

அதே வேளையில், எதிரணியில் தி.மு.க. காங்கிரஸ் கட்சியோடு ஒரு கான்கிரீட்டான கூட்டணியை தொடர்ந்து வரும் நிலையில்.. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்தி தேசிய அரசியலில் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு அதிமுகவின் அத்தனை அணிகளுக்கும்  பா.ஜ.க. மட்டுமே போக்கிடம் என்பதையும் மறுக்கலாகாது.

ஆனால், ஒன்றுபட்ட அல்லது ஒன்று கூட்டப்பட்ட அண்ணா திமுக வை பலப்படுத்தி காலத்தே பயன்படுத்தினால் மட்டுமே பேராசை பா.ஜ.க. வுக்கு அது பிரயோஜப்படுமே தவிர..

அதைவிட்டு, எங்களுக்கு 25  இடங்கள்.. தென்சென்னை எங்களுடையது போன்ற சட்டாம்பிள்ளை தனங்களால் அண்ணா திமுக வின் சுயமரியாதையை சுரண்டினால், அது தொண்டர்களிடையே இணக்கமற்ற வெறுப்பு அரசியலை உருவாக்கி விடும். அது  கூட்டணியே வைத்தாலும் மகசூல் தராத விவசாயமாகி விடும்.

எனவே, அங்குசம் வாங்கும் அளவில் இருந்துகொண்டு யானைக்கு ஆசைப்படக்கூடாத தன்னைத் தான் உணர்ந்து அண்ணா திமுக வின் ஒட்டு மொத்த சக்தியையும் ஒருமுகப்படுத்தி.. 

பலம் பலவீனம்  என கலந்து கிடக்கும் களயதார்த்தத்தை கருத்தில்கொண்டு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மட்டுமே இலைக்கும் பூவுக்குமான இருதரப்பு ஆதாயத்தை தரக்கூடும்..

அதைவிடுத்து,நெல் கொண்டு நீ வா.. உமி கொண்டு நான் வருகிறேன். நாம் இருவரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம் என நினைத்தால், அது  பயனற்ற பதராகிப் போய்விடும் என்பதே உண்மை.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story