நாளை 3-வது டெஸ்ட் மேட்ச் : இந்தியா அதிரடியா? இங்கிலாந்து பதிலடியா? பரபரப்பு..
 

By 
Tomorrow's 3rd Test match Is India in action Is the UK responding பரபரப்பு ..

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் நாளை 25-ந் தேதி தொடங்குகிறது.

அதிரடி தொடரும் ?

முதல் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. 

ஆனால், மழையால் முடிவு பாதிக்கப்பட்டது. லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வி நிலைக்குச் சென்று, அதில் இருந்து மீண்டு, யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியை பெற்றது.

இதேபோல 3-வது டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி மீது, அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (244 ரன்), ரோகித் சர்மா (152) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். 

கடந்த டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ரகானேவும், புஜாராவும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பியது அணிக்கு சாதகமான நிலையே.

கேப்டன் விராட்கோலி, ரி‌ஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் முத்திரை பதிக்க கூடியவர்கள். லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி நேர ஆட்டக்காரர்களான முகமது ‌ஷமியும், பும்ராவும் பேட்டிங்கில் சாதித்தனர்.

கடந்த 2 டெஸ்டிலும் இந்தியா 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியது. இதில் பும்ரா 12 விக்கெட்டும் , முகமது சிராஜ் 11 விக்கெட்டும், ‌ஷமி 7 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

அஸ்வின்-இஷாந்த் :

நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்பது தெரியவில்லை. முதல் 2 போட்டியைப் போலவே, இந்த டெஸ்டிலும் 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கினால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது.

ஒரு வேளை ஆடுகளம் சுழற்பந்துக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதப்பட்டால் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்புள்ளது. லீட்ஸ் ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அஸ்வின் இடம் பெற்றால் இஷாந்த் சர்மா நீக்கப்படுவார்.

கடந்த டெஸ்டில் காயத்தால் ஆட முடியாத வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் இடம்பெறும் பட்சத்தில், இஷாந்த் சர்மா கழற்றிவிடப்படுவார்.

ஜோரூட் வேட்கை :

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

ஆனால், இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலவீனத்துடன் இருக்கிறது. கேப்டன் ஜோரூட் ஒருவரே பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார். 

அவர் 2 சதம் உட்பட 386 ரன் எடுத்துள்ளார். அவரை நம்பிதான் அணியே இருக்கிறது. பந்துவீச்சில் ஆண்டர்சன், ராபின்சன் தலா 9 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

129-வது டெஸ்ட் :

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இங்கிலாந்து வேகப்பந்து வீரர் மார்க்வுட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. இது இங்கிலாந்துக்கு பாதிப்பாகும். 

ஏற்கனவே ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டுவர்ட் பிராட், கிறிஸ்வோக்ஸ், பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. மார்க்வுட் இடத்தில் சகிப்மெக்மூத் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் பலவீனமாக இருப்பதால், டாம் சிப்லிக்கு பதிலாக டேவிட்மலான் இடம் பெற்றுள்ளார். ஜோஸ்பட்லர், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 129-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 128 போட்டியில் இந்தியா 30-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 டெஸ்ட் டிரா ஆனது.

இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
*

Share this story