6 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று ஒன் டே மேட்ச் : இந்தியா-ஜிம்பாப்வே மோதல்..

6year

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. 

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று (18-ந்தேதி) நடக்கிறது. 

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டியிலும், இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது. 

கடைசியாக 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே பயணத்தின்போது இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

காயத்தில் இருந்து குணமடைந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் ராகுலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் அவர்கள் கடைசியாக சர்வதேசப் போட்டியில் ஆடினார்கள். 

இதனால், இருவரும் இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். 

கேப்டன் ராகுலும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ரோகித் சர்மா , ரிஷப் பண்ட் , வீராட் கோலி, பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. 

சஞ்சு சாம்சன் , இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்ததால், அவர் இடத்துக்கு ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி சமீபத்திய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் , 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதனால், மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். 

ஜிம்பாப்வே அணி, சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

ரெஜிஸ் சகபவா தலைமையிலான ஜிம்பாப்வே அணி தனது முழு திறமையை வெளிப்படுத்த கடுமையாக போராடும். 

இரு அணிகளும் இன்று மோதுவது 64-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 63 ஆட்டத்தில் இந்தியா 51-ல், ஜிம்பாப்வே 10ல் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது.
*

Share this story