தேசிய சீனியர் தடகளம் : தமிழக வீரர் அசத்தல் சாதனை
 

By 
ghu

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவனம் ஆதரவுடன் 61-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 5 தினங்களாக நடந்தது. கடைசி நாளான நேற்று தமிழக அணிக்கு மேலும் 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. 

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி 23.27 வினாடியில் கடந்து நட்சத்திர வீராங்கனை ஹிமா தாசை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா 57.08 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 

டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 17.18 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். 

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு பஞ்சாப் வீரர் அர்பிந்தர் சிங் 17.17 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. 21 வயதான பிரவீன் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டினார். மேலும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில். 

தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (50.16 வினாடி) வெள்ளி பதக்கம் வென்றார். இதேபோல பெண்களுக்கான தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

போட்டியின் முடிவில், தமிழக அணி 133.50 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. 8 தங்கம் , 6 வெள்ளி , 8 வெண்கலம் ஆக மொத்தம் 22 பதக்கம் தமிழகத்திற்கு கிடைத்தது. 

பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், ஆண்கள் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தது. ஒட்டுமொத்த பிரிவில் அரியானா (101.50 புள்ளி) அணி 2-வது இடத்தை பிடித்தது. 

அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப் பையை வழங்கினார் கள். 

மேல்-சபை எம்.பி. முகமது அப்துல்லா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
*

Share this story