நடுவரிடம் சகீப் அல் ஹசன் வாக்குவாதம் : வைரல் நிகழ்வு..

shakib

வங்கதேச கிரிக்கெட் வீரர் சகீப் அல் ஹசன் களத்தில் நடுவருடன் மோதுவதை ஒரு பொழுது போக்கு பழக்கமாக செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிபிஎல் குறித்து குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில், டாக்காவில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய சகீப் அல் ஹசன், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதலில் பேட் செய்த பாரிஷல் அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

இதில் சகீப் அல் ஹசன் 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19 ஓவர் முடிவிலேயே வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சகீப் அல் ஹசன் பேட்டிங் செய்யும் போது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆட்டத்தின் 15.4 வது ஓவரில் ரிஜூர் வீசிய பந்து சகீப் அல் ஹசன் தலைக்கு மேல் சென்றது. இதற்கு நியாயப்படி ஓயிடு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், நடுவர் இதனை ஒரு ஓவருக்கு ஒரு ஷாட் பால் என்ற கணக்கில் சேர்த்து விட்டார். இதனால் கடுப்பான சகீப் அல் ஹசன், நடுவரை பார்த்து கத்தினார். பிறகு நடுவரிடம் அடிப்பது போல் நடந்து சென்று எதற்கு ஓயிடு பால் தரவில்லை என்று சண்டையிட்டார்.

அதற்கு நடுவரும், சக வீரரும் ஷகிபுல் ஹசனை சமாளித்து அனுப்பி வைத்தனர். சகீப் அல் ஹசன் கோபப்படுவது இது ஒன்றும் புதிது அல்ல. கடந்த சீசனில் தவறான முடிவு வழங்கிய நடுவரிடம் சண்டை போட்டு பிறகு ஸ்டம்பை உதைத்து சகீப் அல் ஹசன் அராஜகத்தில் ஈடுபட்டார். பிறகு தன்னுடைய செயலுக்கு சகீப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டார்.

வங்கதேச கிரிக்கெட்டில் முறைகேடு நடப்பதால் தான் அவர் இப்படி தட்டி கேட்பதாக சகீப் அல் ஹசன் ரசிகர்கள் அப்போது விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Share this story