அஸ்வினை நீக்கியது சரியான முடிவு அல்ல : ரசிகர்கள் அதிருப்தி 

By 
ein7

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என வல்லுனர்கள் கணித்த காரணத்தினால் 2 சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குமா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

ஏனென்றால் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அஸ்வின் சிறந்த ஆப் ஸ்பின்னர், ஜடேஜா சிறந்த லெக் ஸ்பின்னர். அத்துடன் இரண்டு பேரும் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள். இதனால் யாரை எடுப்பார்கள் என்ற விவாதம் நடந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை. இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அஸ்வினை அணியில் சேர்க்காதது மிக கஷ்டமான ஒன்றுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆடும் சூழ்நிலை மற்றும் அணியின் வெற்றி காம்பினேஷன் ஆகியவற்றிற்காக அவரை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என ரோகித் சர்மா தெரிவித்தார்.

அவருக்கு பதிலாக உமேஷ் யாதவை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. இந்தியா 4 வேக பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கி உள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டி மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிந்து விட்டால் அஸ்வினை சேர்க்காதது குறித்து எந்த விவாதம் எழும்ப வாய்ப்பில்லை. ஒரு வேளை போட்டி ஐந்தாவது நாள் வரை நீடித்தால் சுழற் பந்துவீச்சு தாக்கம் அதிகமாக இருக்கும்.

மேலும் ஆஸ்திரேலியாவில் ஐந்து இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அஸ்வின் எப்போதுமே சவாலாக இருப்பார். ஆகையால் இந்தப் போட்டி முடிந்தபின் ஒருவேளை இந்தியாவுக்கு சாதகமாக போட்டி அமையாவிட்டால் அஸ்வினை அணியில் எடுக்காதது குறித்து மிகப்பெரிய விவாதம் எழும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

Share this story