1.30 லட்சம் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தியாவை எதிர்கொள்வது சவால்: ஸ்டீவ் ஸ்மித்

By 
stev3

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாட உள்ளன. இந்த சூழலில் இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

நடப்பு உலக கோப்பை தொடரில் எந்தவொரு அணியாலும் வீழ்த்த முடியாத அணியாக இந்திய அணி திகழ்கிறது. 10 போட்டிகளில் விளையாடி பத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி, முதல் இரண்டு போட்டிகளில் (இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா) தோல்வியை தழுவி இருந்தது. அதற்கு அடுத்த 8 போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 4-வது முறையும், ஆஸ்திரேலியா 8-வது முறையும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

“இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை எந்தவொரு அணியும் இந்தியாவை வீழ்த்தவில்லை. அதே நேரத்தில் 1.30 லட்சம் பார்வையாளர்களுக்கு முன்பாக இந்தியாவை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும்” என ஸ்மித் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியுடனான அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு அவர் இதனை தெரிவித்தார்.

இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் சொல்லிய வார்த்தைகளை நினைவுகொள்ள செய்கிறது. ‘1.5 பில்லியன் இந்தியர்களில் முதல் 11 பேரிடம் விளையாடுவது கடினம்’ என கடந்த 2021-ல் லாங்கர் சொல்லி இருந்ததார். இதேபோல சிறந்த அணியை இறுதி ஆட்டத்தில் எதிர்கொள்வது மகத்தானது என ஆஸி.யின் பந்து வீச்சாளர் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி வீரர்கள் தற்போது அகமதாபாத் நகரில் முகாமிட்டுள்ளனர். இன்று இறுதிப் போட்டிக்கான பயிற்சியை இந்திய வீரர்கள் தொடங்க உள்ளதாக தகவல்.

Share this story