வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி

By 
Chief Minister Stalin donates Rs 5 lakh to swordsman Bhavani Devi

தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். 

அவரின் ஊக்கத்தினையும், விடா முயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் "விளையாட்டு அலுவலர்" பதவி வழங்கப்பட்டுள்ளது.

முதல் பெண்மணி :

பவானி தேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

அவர் தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார்.

முதலமைச்சர் நிதியுதவி :

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பவானி தேவியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், இன்று (20.6.2021) சென்னை, அண்ணாசாலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
*

Share this story