கிரிக்கெட் களம் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன் இன்று மோதல்..

By 
dra4

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது . 16-ந் தேதி வரை அங்கு 6 ஆட்டங்கள் நடத்தப்பட்டது. ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் 18-ந் தேதி முதல் போட்டிகள் நடை பெற்று வருகின்றன.

நேற்று நடந்த 10 வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சை வீழ்த்தியது. 2 போட்டியில் தோற்ற அந்த அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. 2 போட்டியில் வென்ற நெல்லை அணிக்கு முதல் தோல்வி ஏற்பட்டது. டி.என்.பி.எல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 4-வது ஆட்டமாகும். முதல் போட்டியில் சேலம் ஸ்பார் டன்சை 52 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

3-வது போட்டியில் கோவை கிங்சிடம் 8 விக்கெட்டில் தோல்வியை தழுவியது. 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இருக்கும் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் அந்த அணி வீரர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அதில் இருந்து மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. திருச்சி அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரை அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றி வேட்கையில் உள்ளது. இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி- ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. கோவை கிங்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டில் வெற்றி பெற்று ஒன்றில் தோற்றது. அந்தஅணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
 

Share this story