கிரிக்கெட் கெத்து: சபதத்தை நிறைவேற்றிய ஷாகின் அப்ரிடி; 5 விக்கெட் எடுத்து அபாரம்..

By 
sasa

பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலாக பந்து வீசியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பின் செல்ஃபி எடுக்கலாம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணி மோசமாக பேட்டிங் செய்ததன் காரணமாக, இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் சபதத்தை நிறைவேற்ற முடியாத ஷாகின் அப்ரிடியை கலாய்த்து தள்ளினார்கள்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி இன்று களமிறங்கியது. இந்த போட்டியின் 4வது ஓவரின் போது ஷாகின் அப்ரிடி வீசிய பந்தில் டேவிட் வார்னர் கொடுத்த கேட்சை, உசாமா மிர் தவறவிட்டார். தொடர்ந்து 7வது ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார்.

ஆனால் ஷாகின் அப்ரிடியை சமாளித்துவிட்ட டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இருவரும், மற்ற பவுலர்களை வெளுத்து கட்டினார்கள். இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் சதம் விளாசி ஆக்ரோஷமாக ஆடி வந்தனர். அப்போது மீண்டும் ஷாகின் அப்ரிடி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் மிட்செல் மார்ஷ் 2 சிக்சர்களை விளாசினாலும், மனம் தளராமல் 5வது பந்தில் மிட்செல் மார்ஷை வீழ்த்தியதோடு, அடுத்த பந்திலேயே தனது வேகத்தின் மூலம் மேக்ஸ்வெல்லை முடித்து கட்டினார்.

இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மிடில் ஓவர்களில் 3 ஓவர்களை வீசிய ஷாகின் அப்ரிடி, 29 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து ஷாகின் அப்ரிடி மீண்டும் டெத் ஓவர்களில் அட்டாக்கில் வந்தார்.

கடைசி நேரத்தில் 3 ஓவர்களை வீசிய ஷாகின் அப்ரிடி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக அபாயகரமான வீரரான ஸ்டாய்னிஸை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்புக்கு பிரச்சனையாக அமைந்தது. கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் இருவரையும் வீழ்த்தினர். இதன் மூலமாக 10 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார் ஷாகின் அப்ரிடி.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் மற்ற வீரர்கள் விக்கெட் வீழ்த்தவும் ஷாகின் அப்ரிடி இன்னொரு பக்கம் இருந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தார். இதன் மூலம் ஷாகின் அப்ரிடி தனது பவுலிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு எதிராக மிஸ்ஸான 5 விக்கெட்டுகளை, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செய்து காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

 

Share this story