கிரிக்கெட் டுடே: இந்தியாவுக்கு பெரும் சிக்கல்; செக் வைத்த தென்னாப்பிரிக்கா..

2023 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்கு கடும் போட்டி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா போட்டிக்கு பின்னும் அதே நிலையில் தான் நியூசிலாந்து மற்றும் இந்தியா உள்ளன.
ஆனால், தென்னாப்பிரிக்கா அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்தாலும், மற்ற அனைத்து அணிகளையும் விட அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 2.212 என்ற அளவில் நெட் ரன் ரேட் வைத்துள்ளது. இந்தியா 1.659 நெட் ரன் ரேட் வைத்துள்ளது. நியூசிலாந்து அணி 1.923 வைத்துள்ளது. முதல் இரண்டு அணிகளை விட தென்னாப்பிரிக்கா அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளது.
தற்போது நான்கு போட்டிகளில் ஆடி உள்ள தென்னாப்பிரிக்கா அணி தனது ஐந்தாவது உலகக்கோப்பை போட்டியை ஆடி அதிலும் வென்றால், அடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் தோல்வி அடையும் அணி புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்காவுக்கும் கீழே சென்று விடும்.
அதாவது, இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தால், அடுத்த தென்னாப்பிரிக்கா போட்டிக்கு பின் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. தென்னாப்பிரிக்கா இத்தனை நெட் ரன் ரேட் பெறக் காரணம், இங்கிலாந்து அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தான்.
இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளை தவிர்த்து, மற்ற அணிகள் அனைத்துமே நெட் ரன் ரேட்டில் "மைனஸ்" நெட் ரன் ரேட் விகிதத்தில் உள்ளன. தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
நெதர்லாந்து - இலங்கை இடையே ஆன போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நெதர்லாந்து அணி ஏற்கனவே பெற்ற ஒரு வெற்றியின் மூலம் 2 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஐந்தாம் இடத்திலும், வங்கதேசம் ஆறாவது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.