கிரிக்கெட் டுடே: தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் நடப்பு சாம்பியன்..

By 
en65

இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட் ஆகியோரை கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். 

மேலும், இங்கிலாந்து அணியானது தொடர்ந்து 3ஆவது முறையாக 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியுள்ளது. லக்னோவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுக்கவே இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 229 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மலான் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஜோ ரூட் கோல்டன் டக் முறையில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 10 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஷமி பந்தில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 10 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அப்போது இங்கிலாந்து 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து வந்த மொயீன் அலி 15 ரன்களில் ஷமி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால், அதற்கு முன்னதாவே குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்க வேண்டியது. நடுவரிடம் அப்பீலும் கேட்கவில்லை, ரெவியூவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், அவர் அப்போதே அவுட்டிலிருந்து தப்பித்தார். எனினும், குல்தீப் யாதவ் பந்திலேயே கடைசியாக ஆட்டமிழந்துள்ளார்.

அடுத்து ஷமி பந்தில் அடில் ரஷீத் 13 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக மார்க் வுட் கோல்டன் டக் முறையில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். இதன் மூலமாக இங்கிலாந்து 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு கேப்டனாக ரோகித் சர்மாவின் 100ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலமாக தொடர்ந்து 6ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட் என்று 6 வீரர்கள் கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழந்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக கிழக்கு ஆப்பிரிக்கா அணியின் 7 வீரர்கள் கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழந்துள்ளனர்.

மேலும் இங்கிலாந்து 200 ரன்களுக்குள் 3ஆவது முறையாக ஆல் அவுட்டாகியுள்ளது. இதற்கு முன்னதாக எந்த உலகக் கோப்பை போட்டியிலும் இங்கிலாந்து 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோவில் நடந்த 29ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Share this story