கிரிக்கெட் டுடே : 19 பந்துகளில் இலக்கை எட்டி வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து..

By 
eng78

இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 28ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஓமன் 13.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக சோயீப் கான் 11 ரன்கள் எடுத்தார்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் உட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வில் ஜாக்ஸ் 5 ரன்கள் எடுத்தார். மேலும், ஜோஸ் பட்லர் 24 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து வெறும் 19 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. மேலும், இந்தப் போட்டியில் குறைவான பந்துகளில் வெற்றி பெற்ற நிலையில் நெட் ரன் டேட்டாக +3.081 பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

ஸ்காட்லாந்து விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ஓமன் விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இதே போன்று நமீபியா விளையாடிய 3 போட்டியில் ஒரு போட்டியில் ஒரு வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. குரூப் பி பிரிவில் 2ஆவது அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அல்லது இங்கிலாந்து இரு அணிகளில் ஏதேனும் ஒன்று முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்து கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story