கிரிக்கெட் டுடே: இந்தியா 326 ரன்கள் குவிப்பு-ஆடுகள விவரம்..

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 37ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதில், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 23 ரன்களில் கேசவ் மஹாராஜ் பந்தில் கிளீன் போல்டானார்.
இதையடுத்து விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி அரைசதம் அடித்து அதனை சதத்திற்கு கொண்டு சென்றார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை. அவர் 8 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சூர்யகுமார் மற்றும் கோலி இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் 22 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இந்த நிலையில் தான் விராட் கோலி 3 போட்டிகளுக்கு பிறகு 4ஆவது போட்டியில் 49ஆவது சதம் அடித்துள்ளார். இதற்கு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 48ஆவது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி அதன் பிறகு 95, 0 மற்றும் 88 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் தான் தனது 35ஆவது பிறந்தநாளான இன்று ஒரு நாள் போட்டிகளில் 49ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார். அதுவும் 277 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா 31 சதங்களும், ரிக்கி பாண்டிங் 30 சதங்களும் அடித்துள்ளனர்.
மேலும், பிறந்தநாளில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 131 ரன்கள் நாட் அவுட் மற்றும் மிட்செல் மார்ஷ் இந்த உலகக் கோப்பையில் தனது பிறந்தநாளில் 121 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியாக விராட் கோலி தனது 35ஆவது பிறந்தநாளில் சதம் விளாசியுள்ளார்.
கடைசி ஓவரில் மட்டும் ரவீந்திர ஜடேஜா 6, 4, 4, 1 என்று 15 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியாக இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது. இதில் விராட் கோலி 121 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 101 ரன்கள் நாட் அவுட் மற்றும் ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 29 ரன்கள் எடுத்துள்ளார்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் தென் ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி, மார்கோ யான்சென், கஜிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷாம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.