கிரிக்கெட் டுடே: இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதல்; பும்ரா செம கலக்கல்..

By 
pumra5

உலகக்கோப்பை தொடரின் 9வது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்தியா விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதேபோல் இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார்.

வங்கதேச அணிக்கு எதிரான ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிய முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிக்காக தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின் ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன்பின் ஆட்டம் தொடங்கியது.

ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ் - ஜத்ரான் கூட்டணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை நட்சத்திர வீரர் பும்ரா வீசினார். குர்பாஸ் - ஜத்ரான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜத்ரான் மட்டும் பும்ரா மற்றும் சிராஜ் இருவரின் பந்துகளிலும் சில பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்திருந்தது.

இதனால் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுக்காக தீவிரமாக செயல்பட்டனர். இதனால் பும்ராவுக்கு தொடர்ச்சியாக 4வது ஓவரையும் கொடுத்தார் ரோகித் சர்மா. அந்த ஓவரின் முதல் பந்தில் ஜத்ரான் பவுண்டரி விளாசினார். இதன்பின் அடுத்த 2 பந்துகள் டால் பால் வீசப்பட, 4வது பந்தில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்த ஜத்ரான் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அந்த விக்கெட்டை வீழ்த்திய பின் இங்கிலாந்து மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் பாணியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஒற்றை விரலை தலையில் வைத்து பும்ரா கொண்டாடுவது இதுவே முதல்முறையாகும். அதனை டெம்பிள் பாய்ண்ட் ரியாக்சன் என்று அழைப்பார்கள்.

ராஷ்போர்டின் இந்த கொண்டாட்டம் மனநிலையை குறிப்பதாகும். இதனால் பும்ரா முன்பை விடவும் நல்ல மனநிலையில் இருப்பதாகாவும் சொல்லப்படுகிறது. அதேபோல் நேற்று உலக மனநல தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ரசிகர்களுக்கு மனநிலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பும்ரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பார்க்கப்படுகிறது.

Share this story