கிரிக்கெட் டுடே : 345 ரன்கள் அடித்தும் பாகிஸ்தான் தோல்வி; கெத்து காட்டிய நியூசிலாந்து.. 

By 
nez

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 345 ரன்கள் குவித்தும் நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் முதல் பயிற்சி ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் பாகிஸ்தானும் கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை வந்த நியூசிலாந்தும் மோதின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய இமாமுல் ஹக் ஒரு ரன்னிலும் அப்துல்லா ஷபிக் 14 ரன்கிலும் ஆட்டமிழந்தனர். இதனஒ அடுத்து இந்தியாவில் முதல்முறையாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற பாபர் அசாம் 84 பந்துகளை எதிர்கொண்டு 80 ரன்கள் விளாசினார். எனினும் அதிரடியாக விளையாடிய முஹமது ரிஸ்வான் 94 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார்.

இதேபோன்று நடுவரிசையில் களமிறங்கிய சவுத் சக்கில் 75 ரன்களும், ஆகாஷ் சல்மான் 33 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 346 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சிஎஸ்கே வீரர் கான்வே டக் அவுட் ஆகி வெளியேறினார். எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்தரா மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

வில்லியம்சன் 50 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் அவுட் ஆனார். இதேபோன்று டேரல் மிச்செல்லும் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் ரிட்டையர்ட் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 72 பந்துகளில் எல்லாம் 97 ரன்கள் எடுத்து நியூசிலாந்துக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். கேப்டன் டாம் லாத்தம் 18 ரன்களிலும், அதிரடி வீரர் கிளன் பிலிப்ஸ் 3 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற பாகிஸ்தான் அணியின் கை ஓங்கி இருந்தது.

எனினும் நியூசிலாந்தின் மார்க் சாப்மேன் ஆட்டத்தை தலை கீழ் மாற்றினார். 41 பந்துகளை எதிர்கொண்ட அவர் 65 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரிகளும்,மூன்று சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று ஜேம்ஸ் நீசமும் 33 ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணி 43.4 ஓவர்களில் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு நியூசிலாந்திடம் சிக்கி சின்னாபின்னமானது.

Share this story