உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது; ரூ.33 கோடியை வெல்லப் போறது யாரு?

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இந்தியாவில் இன்று (5-ம் தேதி) தொடங்குகிறது. வரும் நவம்பர் 19-ம் தேதி வரை மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 5முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, இரு முறை பட்டம் வென்றுள்ள இந்தியா, தலா ஒரு முறை வாகைசூடி உள்ள பாகிஸ்தான், இலங்கை, கடந்த இரு முறையும் 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.
பொதுவாக இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் தட்டையாகவே இருக்கும்.இதுபோன்ற ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன்களை எளிதாக வேட்டையாட முடியும். இதனால் இம்முறை உலகக் கோப்பை தொடர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையக்கூடும்.
பரிசுத் தொகை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பெறும் அணிக்குரூ.16.50 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ.6.50 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.