30 ஆண்டுகளுக்கு பின்னரும், இதனை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்: டேவிட் வார்னர்

உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி 309 ரன்கள் வித்தியாசத்தி வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்களும், டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களும் விளாசினர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலிய அணி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றிக் குறித்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பேசுகையில், இன்றைய நாள் மேக்ஸ்வெல்லுக்கு ஸ்பெஷலானது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டி சவால் நிறைந்தது. அந்த ஆடுகளத்திற்கு ஏற்ப விளையாடுவதற்கு சிறிது கூடுதல் நேரம் தேவைப்பட்டது. அதனால் மீண்டும் அடிப்படையான விஷயங்களை தான் செய்தோம். இந்த சூழலில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று தெரியும்.
ஸ்டீவ் ஸ்மித் ரன் சேர்ப்பதற்காக நான் 2 ரன்கள் எடுக்க ஓடினேன். ஆனால் அவர் என்னை ஓடியே களைப்படைய வைத்துவிட்டார். இது என் நினைவில் நீண்ட நாட்களுக்கு நிச்சயம் இருக்கும். நான் எப்போதும் எனது ஃபிட்னஸில் பெருமிதம் கொண்டிருப்பேன். இன்று நான் செய்ததை விராட் கோலி எப்போதும் செய்வார். சக வீரருக்காக ஓடி ஓடி ரன்கள் எடுப்பார். நாங்கள் வாழ்வதே உலகக்கோப்பையை வெல்வதற்காக தான்.
ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிச்சயம் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட வேண்டும். உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் பாண்டிங் பெயர்களுக்கு நடுவில் இருப்பது பெருமையளிக்கிறது. ஏனென்றால் அவர்களின் ஆட்டங்களை பார்த்து தான் வளர்ந்திருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கு பின்னரும் இதனை நினைத்து மகிழ்ச்சியடைவேன் என்று தெரிவித்துள்ளார்.